விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு 

கடலுார்: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென, பிரேமலதா எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து கடலுாரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், விருத்தாசலம் எம்.எல்.ஏ., பிரேமலதா அளித்த மனு: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பீங்கான் தொழிற்சாலையை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள, 20 கிராமங்களை ஆய்வு செய்த போது, நிலத்தடி நீர் மாசுடைந்து, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவது தெரிந்தது. இதற்கு தீர்வு காண பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும். மரவள்ளி கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

விருத்தாசலத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும். சாலை, குடிநீர், தெருமின்விளக்கு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.

விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி விரிவுப்படுத்த வேண்டும். கிராமங்களில் பஸ் வசதி இல்லாத இடங்களில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், துணை செயலாளர் சித்தநாதன், மாநகர செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் கலாநிதி, நிர்வாகிகள் ராஜா, ரமேஷ், வைத்தியநான், அய்யப்பன்  உடனிருந்தனர். 

Advertisement