பிரிட்டனில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மோசடி; இந்திய வம்சாவளி தம்பதி குற்றவாளி என தீர்ப்பு

1

லண்டன்: கொரோனா சமயத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் மோசடியின் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இந்திய வம்சாவளி தம்பதியை குற்றவாளி என்று பிரிட்டன் நீதிமன்றம் அறிவித்தது.

பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோகேஷ் பண்டாரி,59, அவரது மனைவி மீனாட்சி பண்டாரி,58, ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று பரவலின் போது, பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களின் தேவை அதிகரித்து காணப்பட்டது. அந்த சமயத்தில் ஜோகேஷ் பண்டாரி, புதிதாக கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கினார்.

மேலும், கொரோனா மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டார். அதாவது, ஆர்டர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டு, மருத்துவ உபகரணங்களை வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டார். இதன்மூலம், சுமார் ரூ.26 கோடி வரை பெற்றுள்ளார்.

இந்தப் பணத்தை வைத்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான போர்ஷே சொகுசு காரையும், பல லட்சம் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்சுகளையும் வாங்கியுள்ளார். மேலும், வீடுகளை புதுப்பித்தது, ஆடம்பரச் சுற்றுலா செல்வது என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜோகேஷ் பண்டாரி மற்றும் அவரது மனைவி மீனாட்சி பண்டாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், கடந்த 5 வாரங்களாக லெய்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தம்பதிகள் இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், இவர்களின் நிறுவனம் செய்த பல போலி ஒப்பந்தங்களில் பிரதிநிதியாகச் செயல்பட்ட கிரேக் மோரிஸ், 43 என்பவரும் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார். இவர்கள் மூவருக்குமான தண்டனை விபரம் ஆகஸ்ட் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Advertisement