காவிரி நீர் பங்கீடு, மேகதாது திட்டம் விஜய்க்கு கர்நாடகா அழைப்பு?

பெங்களூரு: காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை திட்டம் பற்றி விவாதிக்க பெங்களூரு வரும்படி, தமிழக முதல்வர் விஜய்க்கு, கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., அரசு நடக்கிறது. கர்நாடகாவில் ஜூன், ஜூலையில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. இதனால், காவிரியில் தமிழகத்துக்கு தேவையான நீரை திறந்து விடுவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டில்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், ‘பாசனத்திற்காக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது’ என, கர்நாடக அரசு தெரிவித்து விட்டது.

இந்நிலையில், கர்நாடகா – தமிழகம் இடையில் உள்ள நீண்டகால பிரச்னையான காவிரி நதிநீர் பங்கீடு பற்றியும்; மேகதாதுவில் அணை கட்டுவது பற்றியும் விவாதிக்க, கர்நாடக அரசின் நீர்ப்பாசன துறை அதிகாரிகள், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், ‘நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி பெங்களூரில் ஆக., 3ம் தேதி, கர்நாடக – தமிழக முதல்வர்கள் சந்தித்து பேச்சு நடத்தலாம்’ என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கு தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement