கோர்ட் விசாரணைக்கு ஆஜரான நபர் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரான நபர் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் அடுத்த சாலைஅகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் உதயகுமார், 34; கூலித் தொழிலாளி. இவர், கடந்த மாதம் 29ம் தேதி, நடந்த இடப்பிரச்னை தொடர்பான தகராறில், அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரை தாக்கியுள்ளார்.

இது குறித்து, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இதனையடுத்து, வளவனுார் போலீசார் நேற்று மாலை உதயகுமாரை கைது செய்து, விழுப்புரம் மாஜிஸ்திரேட் எண்.2ல் ஆஜர்படுத்தினர்.

விசாரித்த நீதிபதி, உதயகுமாரை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, ரிமாண்ட் ஆவணத்தில் போலீசார் கையெழுத்திட சொன்னபோது, அதற்கு மறுத்து கோர்ட்டிலேயே உதயகுமார் வாக்குவாதம் செய்தார்.

இந்நிலையில், போலீசாருடன் வெளியே வந்த உதயகுமார், கோர்ட் வளாக ஜன்னல் கண்ணாடியை கையால் உடைத்தார். இதில், கண்ணாடி உடைந்ததுடன், அவரது கையில் காயம் ஏற்பட்டது.

உடன் வளவனுார் போலீசார் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கோர்ட்ட வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement