டில்லி போராட்டம் குறித்து போலி தகவல்கள்; பாகிஸ்தானின் 480 சமூக வலைதளக்கணக்குகள் முடக்கம்

5


புதுடில்லி: டில்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை டில்லி போலீஸ் முடக்கியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் சிலர், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். எனவே, இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டில்லி நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை தூண்டி , இந்தியாவில் வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தானில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தப் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை கண்டறிந்து, அதனை டில்லி போலீசார் முடக்கி உள்ளனர்.

இது தொடர்பாக டில்லி போலீஸ் உதவி ஆணையர் சுமித் ஜா எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாடுகளைச் சேர்ந்த சமூக ஊடகக் கணக்குகளில், போராட்டம் குறித்து பகிரப்படும் போலியான தகவல்களை இளைஞர்களும், மாணவர்களும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும், இந்த சமூக விரோத ஊடகக் கணக்குகள், ஆப்பரேஷன் சிந்தூர் நிகழ்வின் போதும் தீவிரமாக செயல்பட்டதாகவும், தற்போதைய போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement