ராமதாஸ் ஆலோசனை, வழிகாட்டுதல் இருக்கும் பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவிப்பு

திண்டிவனம்: ‘தமிழ்நாட்டில்  தொடர்ந்து நடைபெறும் கனிம வளக்கொள்ளை குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்’ என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலைக்கல்லுாரியில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற பா.ம.க., தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளது வரவேற்கதக்கது. இது மட்டுமின்றி நீட் தேர்வினை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கிராமப் புற மாணவர்கள் நீட் தேர்வினால் மருத்துவம் பயில முடியவில்லை.

ஒரு தேர்வு தற்கொலைக்கு துாண்டுவதென்றால் அந்த தேர்வே தேவையில்லை.  நீட் தேர்வில் வினாத்தாள் வெளியாகி உள்ளதால் தரமில்லாத மாணவர்கள் மருத்துவத்திற்கு வருகிறார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் தான் பாடப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

இதில் கவர்னர் அழுத்தம் கொடுத்து, அரசியல் செய்யக் கூடாது. மரபுகளை கடைபிடிக்க வேண்டும்.  மற்றவர்களை கட்டாயபடுத்தக் கூடாது. தமிழ்த்தாய் வாழ்த்து  முதலில் பாடப்பட வேண்டும்.

மேகதாது விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகவிற்கு பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது.  அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி பிரதமரை சந்திக்க வேண்டும். 

நல்ல எதிர்கட்சியாக பா.ம.க., செயல்பட்டு வருகிறது. தமிழக அமைச்சரவையில் நாங்கள் இடம் பெற மாட்டோம்.

தமிழ்நாட்டில்  தொடர்ந்து கனிம வளக்கொள்ளை நடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை  பாதியை காணவில்லை. கனிமவளக் கொள்ளை குறித்து சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும். குவாரிகளை முறைபடுத்தினால் தமிழக அரசுக்கு 25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

பா.ம.க.,வில் எந்த குழப்பமும் இல்லை. பா.ம.க., வேகமாக வளர்ந்து வருகிறது. பா.ம.க.,வால் கூட்டணி கட்சிக்குத்தான் பலம். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு 88 வயதாகிவிட்டது. அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறார். 

ராமதாஸ் அறிவிப்பு என்பது, அவருடைய முடிவுதான். அரசியலில் ஓய்வு என யாருக்கும் இருக்காது. தொடர்ந்து, அவருடைய ஆலோசனைகள், வழிகாட்டுதல் இருக்கும்.

இவ்வாறு அன்புமணி கூறினார். 

Advertisement