பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கு காலாப்பட்டு சிறையில் அடையாள அணிவகுப்பு
புதுச்சேரி: பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளிகள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நேற்று நடந்தது.
பாகூரை சேர்ந்தவர் புருேஷாத்தமன், 50; சேதராப்பட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்த இவர், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி இரவு பங்கில் இருந்து பைக்கில், வீட்டிற்கு செல்லும் வழியில், ஊசுடு ஏரி அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில் துப்பு கிடைக்காததை தொடர்ந்து, இவ்வழக்கு கடந்தாண்டு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில், புருேஷாத்தமன் 2ம் திருமணம் செய்ய முயன்றதால், அவரது மகன் தனப்பிரவீன், அவரது கூட்டாளிகளை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில், தனபிரவீன், அவரது கூட்டாளிகளான தக்கக்குட்டையை சேர்ந்த கலைவேந்தன்,33; பிரசாந்த்,32; ஆகியோரை கடந்த மாதம் 13ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிகளை உறுதி செய்யும் பொருட்டு நேற்று, மாஜிஸ்திரேட் சேரலாதன் முன்னிலையில், காலாப்பட்டு சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. 2 மணி நேரம் நடந்த அடையாள அணிவகுப்பில், பிற கைதிகளுடன் கலந்து நிற்க வைக்கப்பட்ட, புருேஷாத்தமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கலைவேந்தன், பிரசாந்த் ஆகியோரை, வழக்கின் சாட்சிகள் இருவர் அடையாளம் காட்டினர்.