திருக்குறள் போட்டியில் வென்ற மாணவர், ஆசிரியருக்கு பாராட்டு

நாமக்கல்:உலக திருக்குறள் கூட்டமைப்பின், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டம் சார்பில், அரசு பொது தேர்வில், தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர், ஊக்குவித்த ஆசிரியர்களை பாராட்டி கவுரவிக்கும் விழா நடந்தது.
உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் ஞானமூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன், சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், ''திருக்குறளை வெறும் மனப்பாட பாடலாக மட்டும் கருதாமல், வாழ்வியலில் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறியாக எடுத்துக்கொண்டு வள்ளுவர் காட்டிய வழியில் வாழ வேண்டும். 1,330, திருக்குறளையும் தன் வாழ்வியல் வழிகாட்டியாக எவர் ஒருவர் கடைப்பிடிக்கிறாரோ, அவர் உலகத்தின் மாமனிதராக போற்றப்படுவார்,'' என்றார்.
தொடர்ந்து, பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் பெரியசாமி பேசுகையில், ''இந்திய அரசு திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும்,'' என்றார்.
ராசிபுரம் தமிழ் கழக தலைவர் தட்சிணாமூர்த்தி, பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement