அரசின் கூட்டு ஆலோசனை கூட்டம் தொழில் வளர்ச்சி குறித்து விவாதம்

புதுச்சேரி: அரசின் கூட்டு ஆலோசனை கூட்டத்தில் தொழில் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரியின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முதலீடுகளை ஈர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கான, புதுச்சேரி அரசு மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு இடையிலான கூட்டு ஆலோசனை மன்ற கூட்டம் தலைமை செயலர் சரத் சவுகான் தலைமையில் நடந்தது.

அரசின் தகுதிவாய்ந்த முகமைகள் மூலம் கட்டட வரைபட அனுமதி மற்றும் பயன்பாட்டுச் சான்றிதழ் வழங்கும் புதிய நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதிகளை விரைவாக வழங்கத் தொழில் வசதிப்படுத்தல் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொழில்துறை செயலர் விக்ராந்த் ராஜா பேசுகையில்,  தொழில்துறைக்கு ஏற்ற வகையில் புதிய தீ தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி கிளை தலைவர் நடராஜன் கூறுகையில், அனுமதி வழங்கும் காலம் குறைந்துள்ளதுடன், நிர்வாகத்தின் விரைவான செயல்பாடுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.

கூட்டத்தில், தொழில் உள்கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாடு, நடுத்தர, சிறு, குறு தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்னைகள், துாய்மையான போக்குவரத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement