தேசிய திறனாய்வு தேர்வில் தொடர் சாதனை படைக்கும் சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுகா, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள சூளாங்குறிச்சி ஊராட்சியில் கடந்த 1953ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டு, கடந்த 2003ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டரின் அர்ப்பணிப்பாலும், ஆசிரியர்கள் அலெக்சாண்டர், தமிழ்செல்வி, சுகுணா, கித்தேரி, ரம்யா, நிர்மலா, அலமேலு, கலைவாணி, சிவராமன், தற்காலிக ஆசிரியர்கள் ஷீலா, பிரியங்கா ஆகியோரது ஒத்துழைப்பினாலும் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் 214 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
அரசு பள்ளியிலும் தரமான கல்வி கற்பிக்கப்படும் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் அனைவரும் பெற்றோர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, பள்ளியின் சிறப்பம்சங்கள், சாதனைகள் குறித்து விளக்கி, மாணவர் சேர்க்கை மேற்கொள்கின்றனர். நீண்ட துாரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் வசதிக்காக அரசு பங்களிப்பில் ‘வேன்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘ஸ்மார்ட் போர்டு’ வகுப்பறை: மாணவர்களின் கவனம் சிதறாமல் பாடத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக இரண்டு ‘ஸ்மார்ட் போர்டுகள்’ மற்றும் எல்.சி.டி., புரஜெக்டர் உட்பட பல்வேறு கற்றல், கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் எளிமையாக பாடங்களை கற்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் கல்வி சுற்றுலாவாக செஞ்சி கோட்டை, சாத்தனுார் அணை, வேலுார் தமிழ்நாடு அறிவியல் மையம், அருங்காட்சியகங்கள், வண்டலுார் உயிரியல் பூங்கா, மகாபலிபுரம், பூம்புகார் காவிரிபூம்பட்டினம், தரங்கம்பாடி கோட்டை, பி.எம்., பிர்லா கோளரங்கம் உட்பட பல்வேறு இடங்களுக்கு மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை மத்திய அரசு சார்பில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக முன்னாள் ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு வகுப்பு தொடங்கப்பட்டது.
இதன் விளைவாக தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்கள் தொடர்ச்சியாக தேர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த 2014 முதல் கடந்த கல்வியாண்டு வரை 48 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, மாணவர்கள் லோகேஸ்வரன், ஜெயரூபிகா ஆகியோர் இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, மாநில அளவில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
‘எலைட்’ பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கும் திறமையான மாணவர்களை மேன்மேலும் ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு ‘எலைட்’ மாதிரிப் பள்ளியை நடத்தி வருகிறது. அரசு பள்ளியில் முழு ஆண்டு தேர்வில் பெறும் மதிப்பெண், தேசிய திறனாய்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகள், தனித்திறமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்வு செய்து, ‘எலைட்’ மாதிரி பள்ளியில் சேர்த்துக்கொள்கின்றனர்.
அதன்படி, சூளாங்குறிச்சி நடுநிலைப்பள்ளியில் பயின்ற மாணவர்களில் இதுவரை 8 பேர் எலைட் பள்ளியில் சேர்ந்து, தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு நிகரான கல்வியை பெற்று பயன் பெறுகின்றனர்.
விளையாட்டு போட்டியில் சாதனை மாணவர்களுக்கு நடனம், சிலம்பம், யோகா, சதுரங்கம் உட்பட பல்வேறு திறன்சார்ந்த பயிற்சிகள் கற்பிக்கப்படுகிறது. கடந்த 2014–15ம் கல்வியாண்டில் இருந்து, 2019–20ம் கல்வியாண்டு வரை சர்வதேச அளவில் நடந்த நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போட்டிகளில் 9 பேர் வெற்றி பெற்று பரிசு பெற்றுள்ளனர். மேலும், ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
அறிவியல் ‘இன்ஸ்பையர்’ விருது வானவில் மன்றம் மூலம் மாணவர்கள் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கி, கண்காட்சியில் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். இதிலும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, கடந்த 2009ம் ஆண்டில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு வரை 13 பேர் சிறந்த படைப்புகளை உருவாக்கி அறிவியல் ‘இன்ஸ்பையர்’ விருதில் வெற்றி பெற்று ரூ.10 ஆயிரம் உதவித்தொகை பெற்றுள்ளனர்.
எண்ணும், எழுத்தும் திட்டம், தேசிய திறனாய்வு தேர்வு, மாணவர்களின் விளையாட்டு திறன், சுற்றுப்புற துாய்மை, கற்றல் அடைவு , இலக்கிய மன்றம், உட்கட்டமைப்பு வசதி. மாணவர் சேர்க்கை, சாரண, சாரணியர் இயக்கம், இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம், வானவில் மன்றம், நுாலக பயன்பாடு, அறிவியல் புத்தாக்கம். வகுப்பறை சூழல், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் புதிய உத்திகளை பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் சீரிய முயற்சியால் ஒன்றிய அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
மேலும், கடந்த 2023–24ம் கல்வியாண்டில் ஆண்டு இப்பள்ளி ‘பேராசிரியர் அன்பழகனார்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது கூடுதல் சிறப்பாகும்.
இதற்காக, அப்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழினை பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டரிடம் வழங்கினார். தொடர்ந்து, அப்போதைய சி.இ.ஓ., முருகன் பள்ளியை பாராட்டி, கவுரவித்தார்.
அதேபோல், ‘கற்றலில் 100 நாள் சேலஞ்ச்’ என்ற திட்டத்தில் மாணவர்கள் அனைவரும் கற்றல் திறனை அடைந்ததற்காக பரிசு வழங்கியது பள்ளிக்கு தனி அங்கீகாரம் அளிக்கும் வகையில் இருந்தது. தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர், சிறந்த பள்ளிக்கான விருது, சிறந்த சமூக செயல்பாட்டாளருக்கான விருது என்ற பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
அறக்கட்டளைகளின் பங்களிப்பு பள்ளியின் வளர்ச்சிக்கு மேலாண்மைக்குழுவின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இதில், தயாளன் அறக்கட்டளை மூலம் முன்னாள் மாணவர் மோகன், சுந்தரவடிவேல் அறக்கட்டளை, முன்னாள் மாணவர் ஜெகதீசன் சரவணன் உட்பட பலரின் நிதியுதவி பெறப்படுகிறது. மேலும், நன்கொடை மூலம் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை, கல்வி உபகரண பொருட்கள், பிரிண்டர் மற்றும் புத்தகங்கள், வகுப்பறை கட்டடம் மற்றும் கழிவறை சீரமைப்பு, தளவாட பொருட்கள் வாங்கப்படுகிறது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் மறக்கக் கூடாது என்பதற்காக அவர்களின் பிறந்த தினத்தன்று, இறைவணக்க கூட்டத்தில் நினைவுப்படுத்தி பேசப்படுகிறது. தினமும் திருக்குறள், பழமொழி, சிறுகதைகள், அறிஞர்கள் பற்றிய தகவல் கற்பிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி, அறிவுத்தேடல், உடல் நலன், நல்ல ஒழுக்கம் ஆகியவை அடிப்படை பண்புகளாகும். இவை அனைத்தையும் சிறிய வயதிலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒழுக்கம், சிறந்த கல்வி, பயிற்சி ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
மேலும்
-
இளநிலை பட்டதாரிகள் பி.எச்டி., சேர டில்லி பல்கலை கல்விக்குழு ஒப்புதல்
-
அரசியலில் இருந்து துறவறம் பூணுகிறேன் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
-
கல்குவாரி குட்டையில் குளித்த வாலிபர் சாவு
-
கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ளாட்சி துறை இயக்குநர் ஆலோசனை
-
காங்., மாநில தலைவரை மாத்தலனா கட்சி காலி மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் புகார் வைத்திலிங்கத்துக்கு எதிராக போர்க்கொடி
-
ஆடி பொங்கல் உற்ஸவம்