இளநிலை பட்டதாரிகள் பி.எச்டி., சேர டில்லி பல்கலை கல்விக்குழு ஒப்புதல்
புதுடில்லி: 'நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், நேரடியாக முனைவர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்' என, டில்லி பல்கலை அறிவித்துள்ளது.
டில்லி பல்கலை கல்விக்குழு கூட்டம் துணைவேந்தர் யோகேஷ் சிங் தலைமையில் நடந்தது.
ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மன்ற பரிந்துரைகளை பரிசீலித்த கல்விக் குழு, நான்காண்டு இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த மாணவ - மாணவியர், நேரடியாக முனைவர் பட்டப் படிப்பில் சேருவதற்கான விதிமுறை திருத்தலுக்கு ஒப்புதல் அளித்தது.
ஆனால், இந்த விதிமுறை திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகக் குழு உறுப்பினர்களான மாயா ஜான் மற்றும் லத்திகா குப்தா ஆகியோர், 'நேரடியாக ஆய்வுப் படிப்பில் சேருவோருக்கான இடஒதுக்கீட்டு விதிமுறைகளை தெளிவாக வரையறுக்க வேண்டும்' என, தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.
மேலும், திறந்தநிலை கற்றல் பள்ளியை, 'தொலைநிலை மற்றும் இணையவழி கல்வி மையம்' என, பெயர் மாற்றம் செய்யவும், நிறுவன தலைவர் பதவியை, 'முதல்வர்' என்று மாற்றம் செய்யவும், கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதேபோல, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பெயரில் கல்வி உதவித்தொகை நிறுவவும், புதிய கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பவுத்த ஆய்வுகள் துறையில், சமஸ்கிருத பவுத்த சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தவும், மாற்றுத் திறனாளிகளுக்காக பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனத்தில் தொழில்சார் சிகிச்சை முதுகலை படிப்பை தொடங்கவும் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
'இளங்கலை பாடத்திட்ட கட்டமைப்பு - 2022-'ன் கீழ் தொழில்முனைவோர் மனப்பான்மை, வடிவமைப்பு சிந்தனை, தொழில் மேம்பாடு, தொழில்முனைவோர் தகவல் தொடர்பு, முதலீட்டாளர் சந்திப்பு, நுாலகம் மற்றும் தகவல் எழுத்தறிவுத் திறன்கள் ஆகிய, ஐந்து புதிய திறன் மேம்பாட்டுப் படிப்புகளை தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.