வெண்கலம் வென்றார் ஜண்டு குமார்: காமன்வெல்த் 'பாரா பவர்லிப்டிங்' போட்டியில்

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்தார் ஜண்டு குமார். 'பாரா பவர்லிப்டிங்' போட்டியில் வெண்கலம் கைப்பற்றினார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 'ஹெவி வெயிட் பாரா பவர்லிப்டிங்' (வலு துாக்குதல்) போட்டியில் இந்தியா சார்பில் ஜண்டு குமார், சுதிர் பங்கேற்றனர். முதலிரண்டு வாய்ப்பில் 181, 190 கிலோ பளுதுாக்கிய ஜண்டு குமார், கடைசி வாய்ப்பில் 196 கிலோ பளுதுாக்க முடியாமல் ஏமாற்றினார். மொத்தம் 130.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த ஜண்டு குமார், வெண்கலம் வென்றார்.




முதலிரண்டு வாய்ப்பில் 182, 183 கிலோ பளுவை துாக்கிய மற்றொரு இந்திய வீரர் சுதிர், கடைசி வாய்ப்பில் 211 கிலோ பளுவை துாக்க முடியாமல் ஏமாற்றினார். மொத்தம் 114.1 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்தார் சுதிர்.

நைஜீரியாவின் ரிலுவான் இட்ரிஸ் (132.8 புள்ளி), இங்கிலாந்தின் மாத்யூ ஹார்டிங் (131.0) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.

'போலியோ' பாதிப்பு: பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னாட் கிராமத்தை சேர்ந்த ஜண்டு குமார் 28, தனது 5வது வயதில் 'போலியோ'வால் பாதிக்கப்பட்டார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பெற்றோருடன் இணைந்து காய்கறி வியாபாரம் செய்தார். சிறிது காலம் 'இ-ரிக் ஷா' ஓட்டிய இவர், 2022ல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் கைப்பற்றினார்.

துவக்கத்தில் குண்டு, ஈட்டி எறிதல் போட்டிகளில் கவனம் செலுத்திய இவர், உடல் வலிமை பெறுவதற்காக 'பவர்லிப்டிங்' பயிற்சி மேற்கொண்டார். பின், 'பவர்லிப்டிங்' போட்டியில் விளையாட முடிவு செய்தார். 'போலியோ', வறுமை உள்ளிட்ட பல்வேறு தடைகளை கடந்த ஜண்டு குமார், காமன்வெல்த் விளையாட்டில் அசத்தினார்.

ஜண்டு குமார் கூறுகையில், ''இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத்தந்தது மகிழ்ச்சி. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது,'' என்றார்.


பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'ஜண்டு குமாரின் சிறப்பான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள். இது, அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்,' என, குறிப்பிட்டுள்ளார்.

சாதிப்பாரா மீராபாய் சானு

காமன்வெல்த் விளையாட்டில் பளுதுாக்குதல் போட்டிகள் நடக்கவுள்ளன. இம்முறை இந்தியா சார்பில் 11 பேர் (4 வீரர்கள், 7 வீராங்கனைகள்) பங்கேற்கின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெள்ளி வென்ற மீராபாய் சானு (48 கிலோ) மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டில் 2 தங்கம் (2018, 2022), ஒரு வெள்ளி (2014) கைப்பற்றிய இவர், இம்முறை அசத்தினால் தொடர்ந்து 4வது பதக்கத்தை கைப்பற்றலாம். கடந்த முறை (2022) பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவி (58 கிலோ, வெள்ளி), ஹர்ஜிந்தர் கவுர் (69 கிலோ, வெண்கலம்), லவ்பிரீத் சிங் (+110 கிலோ, வெண்கலம்) மீண்டும் சாதிக்கலாம்.

காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு இதுவரை 46 தங்கம், 51 வெள்ளி, 36 வெண்கலம் என, 133 பதக்கம் கிடைத்துள்ளது. அதிகபதக்கம் கைப்பற்றிய அணிகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு (59 தங்கம், 53 வெள்ளி, 48 வெண்கலம்) அடுத்து 2வது இடத்தில் உள்ளது. நான்கு முறை (1990ல் 24, 2002ல் 27, 2018ல் 9, 2022ல் 10) பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு அதிக பதக்கம் கிடைத்தன.

Advertisement