'லான் பவுல்ஸ்': இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு 'லான் பவுல்ஸ்' போட்டியில் இந்திய பெண்கள் ஜோடி 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

ஸ்காட்லாந்தில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 'லான் பவுல்ஸ்' இரட்டையர் 'பி' பிரிவு போட்டியில் இந்தியா, டோங்கா அணிகள் மோதின. இந்தியா சார்பில் ரூபா ராணி, பிங்கி விளையாடினர். முதல் செட்டை 5-2 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 4-6 என இழந்தது. பின், 'டை பிரேக்கரில்' அசத்திய இந்திய ஜோடி 1-0 என வெற்றி பெற்றது.

முதலிரண்டு போட்டியில் மால்டா, தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடைசி 2 போட்டியில் இந்திய அணி, நமீபியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
* ஆண்கள் ஒற்றையர் 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் சோனோவால் புதுல் 0-2 (4-8, 8-9) என, மலேசியாவின் இசாத் ஷமீரிடம் தோல்வியடைந்தார்.


நீச்சல்: நடராஜ் 11வது இடம்

ஆண்களுக்கான நீச்சல் போட்டி, 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் பங்கேற்றார். இலக்கை 25.29 வினாடியில் கடந்த இவர், ஒட்டுமொத்தமாக 11வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.

* ஆண்களுக்கான 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் தக் ஷன் சசிகுமார் (3 நிமிடம், 58.09 வினாடி), ஆர்யன் நெஹ்ரா (4 நிமிடம், 00.26 வினாடி) முறையே 15, 16வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெறத்தவறினர்.

* 'பாரா' நீச்சல் போட்டியில், பார்வை குறைபாடுள்ள ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 100 மீ., (எஸ்12) பிரிவில் இந்தியாவின் ரவி வீரா வெங்கட புதிகினா (57.10 வினாடி), 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். இதில் பந்தய துாரத்தை 57.57 வினாடியில் கடந்த வெங்கட புதிகினா, 4வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
* பார்வை குறைபாடுள்ள ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 100 மீ., (எஸ்13) பிரிவு தகுதிச் சுற்றில் 8வது இடம் பிடித்த (ஒரு நிமிடம், 05.32 வினாடி) இந்தியாவின் அலி இமாம், பைனலில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 03.73 வினாடியில் கடந்து 7வது இடம் பிடித்தார்.


குத்துச்சண்டை: சபாஷ் சச்சின்




ஆண்களுக்கான குத்துச்சண்டை 60 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சச்சின், கனடாவின் கியோமா அல்-அஹ்மதிஹ் மோதினர். இதில் சச்சின் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஜடுமணி சிங், ஸ்காட்லாந்தின் ஆரோன் கல்லன் மோதினர். இதில் ஜடுமணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.


தென் ஆப்ரிக்க வீரர் சாதனை



ஆண்களுக்கான நீச்சல், 4X100 மீ., 'பிரீஸ்டைல் ரிலே' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வெண்கலம் வென்றது. இதில் இடம் பிடித்திருந்த தென் ஆப்ரிக்காவின் சாட் லெ குளோஸ், காமன்வெல்த் விளையாட்டில் தனது 19வது பதக்கத்தை (7 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம்) கைப்பற்றினார். ஐந்தாவது முறையாக (2010, 2014, 2018, 2022, 2026) காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற இவர், அதிக பதக்கம் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அடுத்த இடத்தில் தலா 18 பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர்களான ஆஸ்திரேலியாவின் பில் ஆடம்ஸ், இங்கிலாந்தின் மிக் கால்ட் உள்ளனர்.


கூடைப்பந்து: இந்தியா ஏமாற்றம்
பெண்களுக்கான 'வீல்சேர்' கூடைப்பந்து (3X3) 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வேல்ஸ் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்தியா 1-16 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணி, தனது 2வது போட்டியில் இன்று ஸ்காட்லாந்தை சந்திக்கிறது.

Advertisement