கடலில் விழுந்த போதை ஆசாமி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மீட்பு 

புதுச்சேரி: கடலில் குடிபோதையில் குளித்தபோது, அலையில் சிக்கிய சென்னை ஆசாமி மற்றும் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மீட்கப்பட்டனர்.

சென்னையைச் சேர்ந்தவர் ஸ்டீபன், 32. இவர், தனது நண்பருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தார். நேற்று மாலை தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்கரைப் பகுதிக்கு சென்ற ஸ்டீபன், அதிக குடிபோதையில் பாதுகாப்பு எச்சரிக்கையை மீறி  கடலில் இறங்கி குளித்துள்ளார்.

அப்போது, ராட்சத அலையில் சிக்கிய ஸ்டீபன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து, அங்கிருந்த லைப் கார்டு ரமேஷ், சுந்தர் ஆகியோர் கடலில் இறங்கி, ஸ்டீபனை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நண்பருடன் மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேபோல், நாமக்கல்லைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, நேற்று புதுச்சேரியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அங்கு உறவினர்களிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து, மாலை 6:00 மணிக்கு, சீகெல்ஸ் ஓட்டல் பின்புறம் உள்ள கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த லைப் கார்டு முத்துக்குமார் மற்றும் கடலோரக் காவல்படையினர், மூதாட்டியை மீட்டனர். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, அறிவுரை கூறி, அவரை அனுப்பி வைத்தனர்.

Advertisement