மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர், அரசு அலுவலர்கள் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வலியுறுத்தல்
நாமக்கல்;'மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர், அரசு அலுவலர்கள் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்' என, புதிய திராவிடர் கழக நிறுவன தலைவர் ராஜ் கவுண்டர் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி சிலைக்கு, ஆண்டு தோறும் அரசு விழா, ஆக., 2, 3ல், கொண்டாடப்படுகிறது.
அதன்படி, வரும், ஆக., 2, 3ல், கொல்லிமலையில், வல்வில் ஓரி விழா, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு, கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி மன்னனின் சிலைக்கு, ஆடிப்பெருக்கான, ஆக., 3ல், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.
இந்நிலையில், கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க செல்லும் அரசியல் கட்சியினர், அமைப்பினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம், நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., சாந்தி தலைமை வகித்தார். டி.எஸ்.பி.,க்கள் ராஜேஸ்வரன், விஜயகுமார் உட்பட அரசியல் கட்சியினர், அமைப்பினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, புதிய திராவிடர் கழக நிறுவன தலைவர் ராஜ் கவுண்டர் நிருபர்களிடம் கூறுகையில், ''வல்வில் ஓரி சிலைக்கு, கலெக்டர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில்லை என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தாண்டு மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர், அரசு அலுவலர்கள் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார்.