வர்த்தகக் கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுடில்லி: கருங்கடலில் அதிகரித்து வரும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களுக்கு மத்தியில், கப்பல்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கை: தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் காரணமாக, கருங்கடல் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்த பகுதியில் கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்உட்பட பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்கின்றன. வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
வர்த்தகக் கப்பல்களில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் பாதுகாப்பு அபாயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். பணியில் இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தூதரக உதவி தேவைப்படும் இந்தியர்கள், இந்தியத் தூதரகம் அல்லது அப்பகுதியில் உள்ள துணைத் தூதரகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். அவசர தேவைக்கு, இந்திய தூதரகம், ரஷ்யா: +7 9652773414, இந்திய தூதரகம், உக்ரைன்: +38 0933559958 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement