போக்குவரத்து துறையை மேம்படுத்த பட்ஜெட்டில் ரூ.28,000 கோடி எதிர்பார்ப்பு

சேலம்:தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு, சேலத்தில் நேற்று நடந்தது.
அதில் பங்கேற்ற பின், சம்மேளன பொதுச்செயலர் ஆறுமுக நயினார் அளித்த பேட்டி: மின்வாரியம், தனியாரிடம் ஒரு யுனிட் மின்சாரத்தை, 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, அதை, 4 ரூபாய் முதல், 'டேரிப்' முறையில் வழங்கு
கிறது. அதேபோல் சிவில் சப்ளை கார்ப்பரேஷன், மத்திய தொகுப்பில் அரிசி கிலோ, 34 ரூபாய்க்கு வாங்கி, அவை ரேஷனில் இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான வித்தியாச தொகையை அரசு, மானியமாக ஒதுக்குகிறது.
அதேபோல் போக்குவரத்துத்துறைக்கும் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு பஸ், 1 கி.மீ., இயக்க, 60 ரூபாய் செலவாகிறது. கிடைக்கும் வருமானம், 30 ரூபாய். வாங்கிய கடனுக்கு, 100 ரூபாய்க்கு, 13 ரூபாய் வட்டி செலுத்த வேண்டி உள்ளது. தொழிலாளர்
களுக்கான, 15,000 கோடி ரூபாயை அரசு செலவு செய்துவிட்டது. அதனால் வரவு - செலவு வித்தியாச தொகையை ஒதுக்க கேட்டு போராடினோம்.
கடந்த, 2022ல் அப்போதைய, அ.தி.மு.க., அரசு, போக்குவரத்துத்துறையை சேவை துறையாக கருதி, 20,000 கோடி ஒதுக்க முடிவெடுத்து, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் ஒதுக்க அரசாணை வெளியிட்டது. 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. 18,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். அத்துடன் தொழிலாளர்களுக்கு, 10,000 கோடி என, மொத்தம், 28,000 கோடி ரூபாய் ஒதுக்க, வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். மேலும் தொழில்நுட்ப பணியாளர்கள், 15,000 பேரில், 7,000 பேர் மட்டும் உள்ளனர். உதிரி பாகங்களும் வாங்குவது கிடையாது. தொழில் நுட்பனர்களை நியமித்து உதிரி பாகங்களை வாங்கி கொடுத்தால் மட்டுமே, போக்குவரத்துத்துறை மேம்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement