தரமற்ற ரோடு என பொதுமக்கள் எதிர்ப்பு எஸ்.ஆர். நகரில் பணிகள் நிறுத்தம்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 38-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.ஆர். நகர் பகுதியில் தரமற்ற முறையில் சாலைப் பணி மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மங்கலம் சாலையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ள எஸ்.ஆர். நகரின் வடக்கு பகுதியிலுள்ள குமரன் முதல் மற்றும் நான்காவது குறுக்கு வீதிகளில் தார் சாலை சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
குமரன் முதல் வீதியில் சில மணி நேரங்களிலேயே பணியை முடித்த ஊழியர்கள், நான்காவது குறுக்கு வீதியில் பணியைத் தொடங்கினர். அப்போது அப்பகுதி பொதுமக்கள், 'சாலைப் பணி தரமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்; பணியின் விவரங்கள் மற்றும் டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்,' என்று வலியுறுத்தினர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'டெண்டர் நிபந்தனைகளின்படி தரமான பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டோம். அதற்கு ஒப்பந்ததாரர் தரப்பினர், 'இதற்கெல்லாம் நேரமில்லை. இங்கு வேண்டாம் என்றால் வேறு இடத்தில் பணி உள்ளது; அங்கு சென்று விடுகிறோம்' என்று கூறிவிட்டு, பணியை பாதியிலேயே நிறுத்திச் சென்றனர்,' என்றனர்.
விரைவில் துவங்கும் வார்டு கவுன்சிலர் சாந்தாமணி கூறியதாவது:
ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சாலைகளில் சீரமைப்புப் பணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வீதியிலும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தற்போது பணி நிறுத்தப்பட்டுள்ளது. தார் தட்டுப்பாடு காரணமாகவும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பணியை விரைவில் மீண்டும் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.