ஸ்டாலின் ஆக்கப்பூர்வ விமர்சனங்கள் வைத்தால் கருத்தில் கொள்ள தயார்; அமைச்சர் ஆதவ்

16

சென்னை: ''குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல. வேறு யாரிடம் இருந்தும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கு தயார்'' என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்னை தொடர்பாக முதல்வர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது உண்மைக்கு முரணானதாகும்.

காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் சட்டப்பூர்வ நீர் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் தமிழக அரசு தொடர் மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டங்களில் தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தி வருகிறது.

கடந்தகால குளறுபடி

தமிழகத்துக்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. எனவே, தமிழகத்தின் சட்டப்பூர்வ நீர் உரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதி நீர் விவகாரத்தில், மேகதாது அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப நாங்கள் விரும்பவில்லை.

மக்களின் வாழ்வுரிமை

அப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல. வேறு யாரிடம் இருந்தும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கும், கவனப்படுத்துவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

அதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்னை அல்ல. தமிழக மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்னையாகும்.

அரசியல் ஆதாயம்

எந்தவித குறுகிய அரசியல் நோக்கத்தோடும், அரசியல் ஆதாயத்தின் கணக்குகளோடும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு செயல்படவில்லை. மாறாக, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழகத்தின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும்; தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும். இவ்வாறு ஆதவ் கூறியுள்ளார்.

Advertisement