காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக்ஸ்: இந்திய பெண்கள் 9வது இடம்
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9வது இடம் பிடித்தது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியா உட்பட 12 அணிகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் பிரனதி, நிஷ்கா, ஈஷிதா, புரோசிஸ்தா சமந்தா களமிறங்கினர். இந்திய அணி 123.000 புள்ளிகளுடன் 9வது இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களை ஆஸ்திரேலியா (158.400), கனடா (157.300), இங்கிலாந்து (154.300) அணிகள் கைப்பற்றின.
* தனிநபருக்கான 'வால்ட்' பிரிவில் 13.025 புள்ளிகளுடன் 7 வது இடம் பிடித்த புரோசிஸ்தா சமந்தா, பைனலுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரனதி, 12.575 புள்ளிகளுடன் 11வது இடம் பிடித்து ஏமாற்றினார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஈஷிதா (11.725), நிஷ்கா (11.075) முறையே 15, 19வது இடத்தை கைப்பற்றினர்.
* தனிநபருக்கான 'ஆல்-அரவுண்டு' பிரிவில் இந்தியாவின் சமந்தா (42.250), ஈஷிதா (41.700), நிஷ்கா (38.550) முறையே 27, 28, 34வது இடம் பிடித்தனர்.
நீச்சல்: பைனலில் இந்தியா
ஆண்களுக்கான 4X200 மீ., 'பிரீஸ்டைல் ரிலே' தகுதிச் சுற்றில், ஸ்ரீஹரி நடராஜ், ஆர்யன் நெஹ்ரா, அனீஷ் கவுடா, தக் ஷன் சசிகுமார் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. இலக்கை 7 நிமிடம், 39.48 வினாடியில் கடந்த இந்தியா, ஒட்டுமொத்தமாக 6வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது.
'லான் பவுல்ஸ்': இந்திய ஜோடி ஏமாற்றம்
பெண்கள் இரட்டையர் பிரிவு 'லான் பவுல்ஸ்' லீக் போட்டியில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் ரூபா ராணி, பிங்கி சிங் பங்கேற்றனர். முதல் செட்டை 5-7 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 10-1 எனக் கைப்பற்றியது. பின், 'டை பிரேக்கரில்' ஏமாற்றிய இந்திய ஜோடி 0-3 என தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3ல் வெற்றி பெற்றது இந்தியா.
சாதிப்பாரா நீரஜ் சோப்ரா
காமன்வெல்த் விளையாட்டு தடகள போட்டியில் இந்தியா சார்பில் 43 பேர் (31 வீரர்கள், 12 வீராங்கனைகள்) களமிறங்குகின்றனர். கடந்த முறை (2022, பர்மிங்காம்) தடகளத்தில் இந்தியாவுக்கு 8 பதக்கம் (ஒரு தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) கிடைத்தது. இம்முறை இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் (ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபு ('டிரிபிள் ஜம்ப்'), தஜிந்தர்பால் சிங் டூர், மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்), தேவ் மீனா (போல் வால்ட்), தேஜஸ்வின் சங்கர், சர்வேஷ் (உயரம் தாண்டுதல்), அனிமேஷ் (200 மீ., ஓட்டம்), பருல் சவுத்ரி (3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்', 5000 மீ., ஓட்டம்) உள்ளிட்டோர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அசத்தினால் 2வது தங்கம் வெல்லலாம். ஏற்கனவே 2018ல் தங்கம் வென்றிருந்தார். ஆனால் இவருக்கு, 'நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்' பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், இலங்கையின் ருமேஷ் தரங்கா தொல்லை தர காத்திருக்கின்றனர்.
இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய நீரஜ் சோப்ரா கூறுகையில், ''ஒவ்வொரு போட்டியிலும் 90 மீ., துாரத்தை கடப்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட இலக்கை துரத்துவதை விட, போட்டியில் வெற்றி பெறுவதே முக்கியம். இம்முறை பதக்கம் வெல்வது எளிதானதல்ல. ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த், ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களும் உள்ளதால் கடுமையாக போராட வேண்டும்,'' என்றார்.
மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது