வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு

சென்னை: மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையை, இரண்டு துறைகளாக பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, 1952 முதல் செயல்படுகிறது. தொடக்கத்தில் இருந்து காலத்துக்கு ஏற்ப, இத் துறையின் பெயர் மாற்றப்பட்டு வருகிறது. நாடு முழுவதற்குமான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில், உச்சபட்ச அதிகாரம் கொண்டதாக இத்துறை உள்ளது. இதன் கீழ், 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.

நிர்வாக தேவை

அது மட்டுமல்லாது, கொல்கட்டா தவிர அனைத்து நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்கள், இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், நிர்வாக ரீதியிலான தேவைகளை கருத்தில் வைத்து, இத்துறையை இரண்டாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்கான அறிவிப்பு, கடந்த 23ம் தேதி வெளியாகி உள்ளது.

இதன்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, 'ராஜ்தானி விகாஸ் விபாக், ஷெஹிரி விகாஸ் விபாக்' என, இரண்டு பெயர்களில் பிரிக்கப்பட்டுள்ளது.

'ராஜ்தானி விகாஸ் விபாக்'கின் கீழ், மத்திய அரசின் சொத்துக்கள், கட்டடங்கள், மத்திய பொதுப்பணித் துறை, அரசின் எஸ்டேட்கள், டில்லி வளர்ச்சி குழுமம், தேசிய தலைநகர் பகுதி, மெட்ரோ ரயில், தேசிய கட்டட கட்டுமான நிறுவனம் போன்றவை இடம் பெறும்.

காலநிலை மாற்றம்

இதேபோல, 'ஷெஹிரி விகாஸ் விபாக்' துறையின் கீழ், நகர், ஊரமைப்பு துறை, நகர்ப்புற போக்குவரத்து திட்டமிடல், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற பகுதிகள், குடிநீர் வினியோகம், காலநிலை மாற்றம், தேசிய வீட்டுவசதி கொள்கை.

வீட்டுவசதி திட்டங்கள், குடிசைப்பகுதி மாற்ற திட்டங்கள், அம்ரூத் திட்டம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், ஹட்கோ போன்றவை இடம் பெறும்.

Advertisement