வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை... தேவை: மாவட்டத்தில் சரணாலயம் அமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி மாவட்டம் 6000 எக்டருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வனப்பகுதியை கொண்டுள்ளது. இங்கு மயில், மான், காட்டுப்பன்றி, குரங்கு, பாம்பு, உடும்பு உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் இருந்தன.
இவைகளின் தேவைக்காக இருந்த பழ மரங்கள், தண்ணீர் குட்டைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, வியாபார நோக்கத்தில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதனால் உணவின்றி தவித்த வனவிலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியே திரிகின்றன.
மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநில பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. வனப்பகுதிக்குள் செல்லும் சாலையோரங்களில் குரங்குகள் உணவுக்காக ஏங்கி காத்திருக்கின்றன. வனப்பகுதி வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் சாலையோரமாக நின்று பழம், காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்களை குரங்குகளுக்கு வழங்குகின்றனர்.
இதனால் எந்நேரமும் சாலையிலேயே காத்திருக்கும் குரங்குகள் சாலையைக் கடக்கும் போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. அதேபோல் குரங்குகள் பைக்கில் சிக்கும் போது அதில் பயணிப்பவர்களும் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
அதேபோல், இரைதேடி அலையும் மான்கள் சாலையைக் கடக்கும் போது வாகனங்களில் சிக்கியும், விளைநில கிணற்றில் விழுந்தும், நாய்கள் கடித்தும் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, சமூக விரோதிகள் மான், மயில் மற்றும் காட்டுப்பன்றியை வேட்டையாடுகின்றனர். தேசிய பறவையான மயில்கள் வேட்டையாடப்படுவது மாவட்டத்தில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.
இதுதவிர வனவிலங்குகளின் அட்டகாசத்தால் நஷ்டமடையும் விவசாயிகள் ஒரு கட்டத்தில் பயிரில் குருணை மருந்தினை கலக்கின்றனர். இதை சாப்பிட்டு பல வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவங்களும் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. இது போன்ற சம்பவங்களால் வனவிலங்குகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் வனவிலங்குகளே இல்லாத மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாறிவிடும்.
கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு முறை நடைபெறும் விவசாயிக் குறைகேட்புக் கூட்டங்களிலும், வனவிலங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், இதற்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
நடப்பாண்டு அதிகரித்துள்ள வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டுள்ளன. இதனால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, மாவட்டத்தில் வனவிலங்கு சரணாலயம் அமைப்பது மட்டுமே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
இவ்வாறு செய்வதன் மூலம் வனவிலங்குகள் பாதுகாப்பாக இருப்பதுடன் அவற்றின் தண்ணீர் மற்றும் உணவு தேவை பூர்த்தியடையும். அதேபோல், விலங்குகளின் தாக்கத்தில் இருந்து பயிரையும், விவசாயிகளையும் காப்பாற்றலாம்.
எனவே, மாவட்ட நிர்வாகமும், வனத்துறை அதிகாரிகளும் இணைந்து வனவிலங்குகள் சரணாலயம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும்
-
தெய்வமும், மகனின் கடின உழைப்பும் கைவிடவில்லை: வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியின் தாய் உருக்கம்
-
இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு விதிப்பு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
-
ஊமங்கலம், அம்பேத்கர் நகரில் மின்தடை
-
அடங்க மறுக்கும் குரங்கு: பிடிக்க துடிக்கும் வனத்துறை
-
காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
-
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்