முதியவரை ஏமாற்றிய 6 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நிலத்தை கிரையம் செய்து முதியவரை ஏமாற்றியதாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 70; இவருக்கு தென்கீரனுார் மற்றும் நீலமங்கலம் கிராம எல்லையில் 14 ஏக்கர் விளை நிலம் உள்ளது. இதில், 13 ஏக்கர் நிலம் அனுபவிக்கும் உரிமையை பங்காரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 62; என்பவருக்கு அளித்துள்ளார்.

இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் கடந்த பிப்ரவரி மாதம் 2.60 ஏக்கர் நிலத்தை பரிகம் கிராமத்தைச் சேர்ந்த மோகனப்பிரியாவுக்கு கிரையம் கொடுத்துள்ளார்.

இதற்காக தனியார் வங்கி மூலம் 24.10 லட்சம் ரூபாயை காசோலை மூலம் பெற்றதாக ஆவணப்படுத்திய நிலையில், பரிவர்த்தனை நடைபெறவில்லை.

அதேபோல், ராமலிங்கத்தின் வங்கி கணக்கிற்கும் பணம் வரவில்லை. இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் மற்றும் சிலர் தன்னை ஏமாற்றுவதாக ராமலிங்கம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், கோபாலகிருஷ்ணன், மோகனப்பிரியா, வெங்கடேசன், அசோக்குமார், விமல்ராஜ், யுவராஜ் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement