குடியிருப்பு பகுதியில் குப்பை தேக்கம் மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
திருப்பூர்: மங்கலம் ரோடு, கான்வென்ட் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரம் குப்பை கொட்ட வந்த மாநகராட்சி வாகனம் பொதுமக்களால் சிறைப் பிடிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் ரோடு, லிட்டில் பிளவர் பள்ளிக்கும் கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப் பகுதிக்கும் இடையே உள்ள பகுதியில் ரோட்டோரம் குப்பை கழிவுகள் கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 38 மற்றும் 39 ஆகிய வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை இப்பகுதியில் கொட்டுகின்றனர்.
இவ்வாறு, நீண்ட நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் அகற்றப்படவில்லை. இதனால், சுற்றுப்பகுதியில் வசிப்போர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில், நேற்று பிற்பகல் அங்கு குப்பை கழிவுகளை கொண்டு வந்த கொட்ட மாநகராட்சி வாகனங்கள் இரண்டு வந்தன. இதனையறிந்து திரண்ட பொதுமக்கள் குப்பை கொட்ட எதிர்பபு தெரிவித்தும், தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் வலியுறுத்தி, வாகனங்களை சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தி வாகனத்தை விடுவித்தனர்.
‘தேங்கியுள்ள குப்பை கழிவுகளை நாளை (இன்று) காலை 9:00 மணிக்குள் அகற்ற வேண்டும். இல்லாவிடில், அதே இடத்தில் பொதுமக்கள் திரண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். மேலும், மீண்டும் இங்கு குப்பை கொட்டக் கூடாது,’ என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.