'கொடை'யில் நீர்வரத்து குறைந்த அருவிகள்
கொடைக்கானல்:கொடைக்கானல் முக்கிய நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை, வட்டக்கானல், புலவி சாறு, டைகர் சோலை, பாம்பார்புரம், சுடுதண்ணிபாறை, தலையாறு உள்ளிட்ட அருவிகளில் இத்தருணத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாதது, எல்நினோ பிரச்னையால் மாறுபட்ட வானிலை நீடித்து வருகிறது. அவ்வப்போது லேசான சாரல், மிதமான மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் குடிநீர், பாசன வசதியின்றி நிலத்தடி நீர்மட்டமும் சரிந்துள்ளது.
தற்போது நீர்வரத்து குறைந்து முக்கிய அருவிகள் சிற்றோடை போல் காட்சியளிக்கிறது. மலை முகடுகளுக்கு இடையே அழகுற காட்சித்தந்த அருவிகள் வறண்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.