ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
ரிஷிவந்தியம்: அரியலுார் வட்டார கல்வி அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாணாபுரம் அடுத்த அரியலுார் வட்டார தலைவர் குரு அருள்ஜோன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் பழனிசாமி வரவேற்றார். முன்னாள் மாநில நிர்வாகிகள் முத்தமிழன், ஏழுமலை, மாநில துணைச் செயலாளர் லுார்துசாமி, துணைத் தலைவர் அசோக்குமார் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், ‘டெட்’ தேர்வை ரத்து செய்தல், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியையும், மருத்துவத்தையும் மத்திய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
கடந்த 2010ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதிவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வட்டார பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.