ஆன்லைனில் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி: வாலிபருக்கு போலீஸ் வலை
விழுப்புரம்: மேல்மலையனுார் அருகே பழைய காயினுக்கு பணம் தருவதாக ஆன்லைனில் கூறி வாலிபரிடம் ஒரு லட்சத்து 6,500 ரூபாயை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த மேட்டுவைலாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் மணிகண்டன், 26; தனியார் நிறுவனத்தில் இயந்திர ஆப்பரேட்டராக பணிபுரிகிறார்.
இவர், கடந்த 25ம் தேதி தனது மொபைல் போனில் பேஸ்புக்கை பயன்படுத்தியபோது பழைய 5 ரூபாய் நோட்டுகள் அதிக விலை கொடுத்து பெறப்படும். தொடர்புக்கு என விளம்பரம் வந்துள்ளது.
இதனைப் பார்த்த மணிகண்டன், அதிலிருந்த எண்ணுக்கு பழைய 5 ரூபாய் நோட்டை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.
பின், அந்த அடையாளம் தெரியாத நபர், மணிகண்டனை தொடர்பு கொண்டு பேசி, 5 ரூபாயை பெற்று கொள்வதாகவும், அதற்கு விலைாக 6 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளர். மேலும், அந்த பணத்தை பெற ஜி.எஸ்.டி., மற்றும் கூரியர் செலவுக்கு பணம் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை உண்மை என நம்பிய மணிகண்டன் தனது வங்கிக் கணக்கிலிருந்து 6 தவணைகளாக மர்ம நபர் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய 'கியூ ஆர்' கோடை ஸ்கேன் செய்த பின் வந்த யுபிஐ ஐ.டி.,க்கு ஒரு லட்சத்து 6,500 ரூபாய் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, மர்ம நபர், மணிகண்டனுக்கு சேர வேண்டிய தொகையை தராமல் ஏமாற்றுவதன் மூலம், தான் பணத்தை இழந்த விஷயம் தெரியவந்துள்ளது.
பணத்தை மீட்டுத்தரக் கோரி, மணிகண்டன், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.