'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'
சென்னை: 'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்காக, வரும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே, தமிழக அரசு தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை; சிவகங்கை மாவட்டம், ஜெயங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான வேலாயுதம் மீது, சமூக விரோதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் படுகாயமுற்று, தீவிர சிகிச்சைப் பிரிவில், அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி, அதிர்ச்சியும், மன வேதனையும் தருகிறது.
தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடக்கும் கொலைவெறி தாக்குதல்களை தடுக்கத் தவறி, வேடிக்கை பார்க்கும், த.வெ.க., அரசின் செயலற்ற தன்மை வன்மையான கண்டனத்துக்கு உரியது.
மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு உட்பட நாளும் நடக்கும் சமூக அவலங்கள், குற்றங்களுக்கு எதிராக, சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே, பாதுகாப்பு இல்லையென்றால், சாமானிய மக்களின் நிலை என்ன?
வேலாயுதம் போன்று, சமூக அக்கறை கொண்டவர்கள் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்தப்படுவதை, த.வெ.க., அரசு தடுக்கத் தவறினால், மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம், இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி உருவாகும்?
எனவே, இதுபோன்று கொலைவெறி தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை, வரும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் என்பவர் யார் யார் சைமன்.