காப்பர் கேபிள் திருட்டு: 3 பேருக்கு 'காப்பு'

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, முள்ளுக்குறிச்சியில், 20 ஆண்டுகளுக்கு முன், பி.எஸ்.என்.எல்., எக்ஸ்சேஞ்ச் அலுவலகத்தில் இருந்து சாலையோரம் காப்பர் கேபிள்கள் பதிக்கப்பட்டிருந்தன.

தற்போது, போன் சேவை அதிகம் இல்லாததால், பதிக்கப்பட்ட காப்பர் கேபிள்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தன. பதிக்கப்பட்டுள்ள காப்பர் கேபிள் பராமரிப்பை, வடுகத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார்.நேற்று காலை, 6:00 மணிக்கு அதிகாரியும், ஒப்பந்ததாரர் ரமேஷூம் முள்ளுக்குறிச்சி பகுதியில் காப்பர் கேபிள் குறித்து தணிக்கைக்காக சென்றனர். அப்போது, முள்ளுக்குறிச்சி வாச்சுக்கல் ஆறு பாலம் அருகே பதிக்கப்பட்டுள்ள, 12 மீட்டர் அளவுள்ள காப்பர் கேபிள்களை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட காப்பர் கேபிளின் மதிப்பு, 30,000 ரூபாய். இதுகுறித்து ஆயில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். விசாரணையில் காப்பர் கேபிள் திருட்டில் ஈடுபட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த குமார், 32, சக்திவேல், 30, சுரேஷ் (எ) ரமேஷ், 29, ஆகிய, 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement