சமூக பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்ளுங்க! மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
மடத்துக்குளம்: ‘‘புத்தக அறிவுடன் நல்ல பண்புகளையும், சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்,’’ என திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறினார்.
மடத்துக்குளம் அருகேயுள்ள குப்பம்பாளையத்தில், 1926ம் ஆண்டு துவக்கப்பட்ட, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது.
நுாறு ஆண்டை கடந்த இப்பள்ளியில், ஆத்துார், கொழுமம். குப்பம்பாளையம், புதுநகரம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள, குழந்தைகள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை துவக்க விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே திறந்து வைத்து பேசியதாவது :
தரமான கல்வி, திறன் மேம்பாடு, விளையாட்டு, கலை, அறிவியல் மற்றும் ஒழுக்கம் ஆகிய அனைத்திலும் மாணவர்கள் முன்னேற வேண்டும்.
புத்தக அறிவுடன் நல்ல பண்புகளையும், சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதித்து, உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
நுாறு ஆண்டுகள் என்பது ஒரு பள்ளியின் வயது மட்டுமல்ல. அது ஒரு சமூகத்தின் கல்விப் பயணம், பண்பாட்டு வளர்ச்சி மற்றும் தலைமுறைகளை உருவாக்கிய பெருமைமிகு வரலாறு.
இந்தப் பள்ளியில் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூக வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் தங்கள் பங்களிப்பை வழங்கியிருப்பார்கள்.
அவர்களுக்கும், அனைத்து ஆசிரியர்களுக்கும், முன்னாள் தலைமையாசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பேசினார்.
இதில், சங்கராமநல்லூர் பேரூராட்சித்தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் பிரேமலதா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அருள்ஜோதி, மடத்துக்குளம் பி.டி.ஓ., கவிதா, சங்கராமநல்லுார் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவா, குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பொன்னுதாய், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாமோதரன் மற்றும் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
சிறையில் கணவர்; விபத்தில் மனைவி பலி குழந்தை தவிப்பால் நிவாரணம் கேட்டு மறியல்
-
31 பேர் அரசு பணி ரத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
இரவில் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எப்போது?
-
செயல் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க 2வது மாநாடு
-
மண் எடுக்க மறுப்பு விவசாயிகள் அதிருப்தி