பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புறகாவல் நிலையம் திறக்கப்படுமா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புறகாவல் நிலையம், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.
கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இங்கு சென்னை, சேலம், கடலுார், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வருகைகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில், பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் ஆங்காங்கே சமூக விரோதிகள் சிலர் சுற்றி திரிவதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்படுகிறது. பஸ் நிலையத்தில் அசவுகரியமான சம்பவங்கள் நிகழும் போது உடனடியாக போலீசாரை தொடர் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து வருவதற்குள் திருட்டு ஆசாமிகள், வீண் பிரச்சனைகளில் ஈடுபடும் சமூக விரோதிகள் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகின்றனர். இதனால் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில், பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் புறநகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் புறக்காவல் நிலையம் இதுவரை திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. எனவே, கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்படுள்ள புறகாவல் நிலையத்தை உடனடியாக திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.