மின் இணைப்பு வழங்க லஞ்சம் மின்துறை ஊழியர் கைது

அரியாங்குப்பம்: துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு கொடுக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின்துறை ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, தவளக்குப்பம் மின்துறை அலுவலகத்தில் உதவி லைன் ஆய்வாளராக பணி செய்து வருபவர் ஆறுமுகம். தவளக்குப்பம் கடை ஒன்றில் மின்சார கட்டண பாக்கி இருந்ததால் கடைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அந்த கடைக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்து,  மீண்டும் மின் இணைப்பு கொடுக்க கடை உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டார்.

அதையடுத்து, அந்த நபர் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில், மின் இணைப்பு கொடுக்க கடை உரிமையாளர், உதவி லைன ஆய்வாளர் ஆறுமுகத்திடம் நேற்று 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ஆறுமுகத்தை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement