வைபவ் சூர்யவன்ஷி 'நம்பர்-48': 230 இடம் முன்னேற்றம்

1

துபாய்: சர்வதேச 'டி-20' தரவரிசையில் 230 இடம் முன்னேறிய வைபவ், 48 வது இடம் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.

'டி-20' போட்டிக்கான பேட்டர் தரவரிசையில், இந்தியாவின் 15 வயது வீரர், வைபவ் சூர்யவன்ஷி, 536 புள்ளிகளுடன் 48 வது இடம் பிடித்துள்ளார். இவர் 278வது இடத்தில் இருந்து, 230 இடம் முன்னேறியுள்ளார்.


சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில், 2 அரைசதம் உட்பட 151 ரன் ('ஸ்டிரைக்ரேட்' 196.10, சராசரி 50.33) விளாசிய வைபவ், முதல் முறையாக தொடர் நாயகன் விருது வென்றதை அடுத்து இந்த முன்னேற்றம் கிடைத்தது.

இந்தியாவின் இஷான் கிஷான் (910 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா (819) 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஏமாற்றிய இவர், 3 போட்டியில், 11 ரன் மட்டுமே எடுத்திருந்தார். இந்தியாவின் திலக் வர்மா (750) 8வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (630) 31வது இடத்தில் இருந்து 24வது இடத்துக்கு முன்னேறினார்.
சுப்மன் 'நம்பர்-1'


ஒருநாள் போட்டிக்கான பேட்டர் தரவரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில், 801 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து முதலிடத்தை தட்டிச் சென்றார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடாத நியூசிலாந்தின் டேரில் மிட்சல் (794 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மற்ற இந்திய வீரர்களான விராத் கோலி (767), ரோகித் சர்மா (758) முறையே 3, 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

Advertisement