குல்வீர் சிங், ஹர்ஜிந்தர் கவுர் 'வெள்ளி' * காமன்வெல்த் விளையாட்டில் அபாரம்

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு 10,000 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்றார் இந்தியாவின் குல்வீர் சிங். பளுதுாக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளி கைப்பற்றினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் குல்விந்தர் சிங் 28, உட்பட மொத்தம் 15 பேர் பங்கேற்றனர். மழை பெய்த போதும் போட்டி தொடர்ந்து நடந்தது. கடைசி 1200 மீ., துாரம் இருந்த போது குல்விந்தர், 7வது இடத்தில் இருந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், வேகத்தை அதிகரித்தார். கடைசி 200 மீ., ஓட்டத்தில் முன்னேறிய குல்வீர் சிங், 27 நிமிடம், 49.78 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். காமன்வெல்த் 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது ஆனது.
ஆஸ்திரேலியாவின் ராபின்சன் (27:48.93) தங்கம், இங்கிலாந்தின் டேவிட் முல்லார்கே (27:50.28) வெண்கலம் வசப்படுத்தினர். கடந்த 30 ஆண்டில் முதன் முறையாக கென்ய வீரர்கள் யாரும் எவ்வித பதக்கமும் வெல்லவில்லை.
ஹர்ஜிந்தர் அபாரம்
பெண்களுக்கான 69 கிலோ பிரிவில் பளுதுாக்குதல் நடந்தது. இந்தியா சார்பில் ஹர்ஜிந்தர் கவுர் 29, பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 101 கிலோ துாக்கினார். அடுத்து 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் அதிகபட்சம் 126 கிலோ பளுதுாக்கினார். ஒட்டுமொத்தமாக 227 கிலோ பளுதுாக்கிய ஹர்ஜிந்தர் கவுர், வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2022 காமன்வெல்த்தில் இவர், வெண்கலம் வென்றிருந்தார்.
கனடாவின் சார்லொட்டீ, 240 கிலோ (108+132) துாக்கி காமன்வெல்த் சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் நியா பெபே (218) வெண்கலம் வென்றார்.

இதுவரை '7'
நடப்பு காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இதுவரை இந்தியா 7 பதக்கம் கைப்பற்றியது. மீராபாய் சானு மட்டும் தங்கம் வென்றார். தவிர, 5 வெள்ளி, 1 வெண்கலம் கிடைத்துள்ளது.

சாதனை வீரர்
உ.பி.,யின் சிர்சாவை சேர்ந்தவர் குல்வீர் சிங். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் ஜவானாக உள்ளார். 3,000, 5,000, 10,000 மீ., மற்றும் 25 கி.மீ., ஓட்டங்களில் தேசிய சாதனை படைத்துள்ளார்.
குல்வீர் சிங் கூறுகையில்,'' போட்டியின் போது மழை பெய்து கொண்டிருந்தது. எனினும் தேசத்திற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என விரும்பினேன். இதனால் பதக்கம் வென்ற தருணத்தில், வெயில், மழை, வெப்பம் என எதுவாக இருந்தாலும், பெரிய விஷயமாக தெரியவில்லை,'' என்றார்.

Advertisement