அதிமுக குழப்பத்திற்கு தீர்வு காண அமித் ஷாவை சந்திக்க பழனிசாமி முடிவு

32

சென்னை: அ.தி.மு.க.,வில் நிலவும் உட்கட்சி பூசல், குழப்பங்களுக்கு தீர்வு காண, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. அதிருப்தி அணியாக செயல்படும் முன்னாள் அமைச்சர் வேலுமணி தன் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருகிறார். முன்னாள் அமைச்சர் சண்முகம், தனது ஆதரவாளர்களை அ.தி.மு.க.,வை விட்டு விலக வைத்து வருகிறார்.

இந்நிலையில், பொதுச்செயலர் பழனிசாமி, அ.தி.மு.க.,வின் 85 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி முடித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் கட்சி செயற்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் உட்பட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரை ராஜினாமா செய்ய வைத்து, தமிழக வெற்றிக் கழகம் தனது பக்கம் இழுத்துள்ளது.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, பழனிசாமி முயற்சி செய்து வருகிறார். மறுபுறம், த.வெ.க., மீது நடவடிக்கை எடுக்க, டில்லி தலைவர்களிடமும் பேசி வருகிறார்.

அ.தி.மு.க.,வில் தன் தலைமையை நீடிக்க வைக்க, பெரும் நெருக்கடியை சந்திக்கும் பழனிசாமி, நிலைமையை சீராக்க டில்லி பா.ஜ., தலைமையை நம்பி உள்ளார்.

அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, கடந்த 22ம் தேதியே சந்திக்க பழனிசாமி திட்டமிட்டு இருந்தார். ஆனால், 24ம் தேதி அமித் ஷா தமிழகம், புதுச்சேரிக்கு வரவிருந்ததால், பழனிசாமியின் டில்லி பயணம் ரத்தானது.

அதேநேரம், 'நீட்' விவகாரத்தில் டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டம், லோக்சபா கூட்டத்தொடர் காரணமாக, அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், லோக்சபா கூட்டத்தொடர் முடிந்த பின், அமித்ஷா வை சந்திக்க, பழனிசாமி நேரம் கேட்டுள்ளார்.

அதன்படி, ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில், அமித் ஷா - பழனிசாமி சந்திப்பு நடக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement