காவிர் நீர் பிரச்னை தொடர்பான கேள்வி பதில் கூறாமல் சென்ற அமைச்சர் ஆனந்த்

விழுப்புரம்: காவிரி நீர் பிரச்னை தொடர்பாக,விழுப்புரத்தில் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் ஆனந்த் பதில் கூறாமல் புறப்பட்டுச் சென்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று ரூ.41.834 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைக்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் ஆனந்த் கலந்துகொண்டார். இதற்காக, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு காலை வந்த அவர், அங்கிருந்து அருகே உள்ள வழுதரெட்டி சிவ, விஷ்ணு கோவிலுக்கு, மொபட்டில் சென்று வழிபட்டார். அங்கு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்துவிட்டு அமைச்சர் ஆனந்த் வெளியில் வந்தார்.

அப்போது, நிருபர்கள் அவரை சூழ்ந்துகொண்டு, காவிரி நீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவிற்கு முதல்வர் விஜய் எப்போது போகிறார், நீங்களும் போகிறீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு, அமைச்சர் ஆனந்த் எந்தவித பதிலும் கூறாமல் அமைதியாகவே நின்றார். உடனே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். காவிரி நீர் பிரச்னை பூதாகரமாகியுள்ள நிலையில், நீர் வளத்துறை அமைச்சரான ஆனந்த், பதில் கூறாமல் மவுனமாக சென்றது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Advertisement