நகர்ப்புற நில ஆவணங்கள் டிஜிட்டல் வரைபடங்களாக புதுப்பிப்பு! மத்திய அரசின் 'நக் ஷா' திட்டத்தில் களப்பணிகள் தீவிரம்

திண்டுக்கல்: மத்திய அரசின் 'நக் ஷா' திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் நகராட்சிகளில் நில ஆவணங்களை வான்வழி படங்கள், கள ஆய்வுகள் மூலம் டிஜிட்டல் வரைபடங்களாக புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மத்திய அரசின் நிலவளத்துறை மூலம் டிஜிட்டல் இந்தியா நிலப்பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 'நக் ஷா' என்ற தேசிய நகர்ப்புற நில அளவீட்டு திட்டம் 2025ல் துவங்கப்பட்டது.

இத்திட்டத்தில் மத்திய அரசின் நிலவளத்துறை, மாநில அரசின் நிலஅளவைத்துறை இணைந்து 'ட்ரோன்' கருவிகள் மூலம் வான்வழி படங்கள், கள ஆய்வுகள் ஆகியவற்றை கொண்டு நகர்ப்புற நில எல்லைகளை துல்லியமாக கணக்கிட்டு நிலப்பதிவுகளை நவீனமயமாக்கி புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது.

புவிசார் தகவல் அமைப்பு தொழில்நுட்பம் மூலம் (ஜி.ஐ.எஸ்.,) வரையறுக்கப்படும் வரைபடங்களை உருவாக்குவதால் நில அளவுகள் துல்லியமாக நிலம், சொத்து உரிமையாளர்களுக்கு கிடைக்கும்.

45 ஆயிரம் வீடுகளில் நிறைவுதிண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. மாவட்ட நிலஅளவைத்துறையினர், மாநகராட்சி வருவாய்ப்பிரிவினர் இணைந்து ட்ரோன் சர்வே, பிரத்யேக நில அளவை செயற்கைகோள் கருவி ஆகியவற்றை கொண்டு துல்லிய வரைபடங்களை 45 ஆயிரம் வீடுகளுக்கு எடுத்து முடித்துவிட்டனர்.

இதன்மூலம் சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர் சொத்து விபரங்கள் துல்லிய வரைபடங்களாகவும், டிஜிட்டல் ஆவணங்களாகவும் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டு உள்ளன.

தொடர்ந்து மாநகராட்சி வரியின ஆவணங்கள், உரிமையாளர்கள் வைத்துள்ள ஆவணங்களுடன் இணைத்து ஒப்பீட்டு அளவில் பார்த்து சீர் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இதற்காக திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் நகராட்சிகளில் வாகனங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன.

ஒத்துழைப்பு அவசியம்

நில அளவைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநகராட்சி, நகராட்சிகளில் வீடுகளுக்கு வரும் நில அளவை, மாநகராட்சி, நகராட்சி வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் தங்களது ஆவணங்களை காண்பித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் வீட்டிற்கு வரும் அரசு ஊழியர்களின் அடையாள அட்டை, நபர் யார் என்பதையும் உறுதிப்படுத்திய பின் ஆவணங்கள் வழங்கி ஊர்ஜிதம் செய்வது அவசியம்' என்றார்.

Advertisement