புதுச்சேரியிலிருந்து காரில் மது கடத்திய இருவர் கைது

வானுார்: ஆரோவில் அருகே காரில் மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி–திண்டிவனம் பைபாஸ் சாலையில், ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார், நேற்று வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, மாட்டுக்காரன் சாவடி அருகில், சந்தேகத்திற்கு இடமான வகையில், காரில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனர்.

அவர்கள் முரணான பதில்கூறவே, போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து 80 மதுபாட்டில்கள் காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. அவர்கள், போலீசார் விசாரணையில், புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த முரளிதரன், 32; குட்டி ஆண்டனி, 30; ஆகியோர் என்பதும், இருவரும் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் பாரில் வேலை பார்க்கும், சரண்ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் ஏற்பாட்டின்படி, மொரட்டாண்டி டோல்கேட் வரை காரில் மது கடத்தி வந்ததும், அங்கிருந்து துாத்துக்குடி பகுதிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மூலம், அதனை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.அதன் பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, முரளிதரன், குட்டி ஆண்டனி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 80 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய எட்டியாஸ் காரையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், தலைமறைவான சரண்ராஜ், தினேஷ், மாரியப்பன் ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement