முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதில் எந்த பயனும் இல்லை: இபிஎஸ் பேட்டி

1

சேலம்:
''முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதில் எந்த பயனும் இல்லை,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.


சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை பெற ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய நிலை உள்ளது. மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும். குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது.


காவிரி விவகாரத்தில் புதிதாக நடுவர்மன்றம் அமைப்பது தேவையற்றது. முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதை தவிர்க்க வேண்டும். இதனையே அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும் தெரிவித்து வருகின்றன.


கர்நாடகா முதல்வர் சிவக்குமார், 'கர்நாடகா வரும் விஜயை வரவேற்போம். ஹெலிகாப்டரில் கர்நாடகாவை சுற்றிப்பார்க்க வேண்டும். அதன் பிறகு கருத்து சொல்ல வேண்டும்' எனக் கூறியுள்ளார். அப்படி என்றால், தண்ணீர் தர மாட்டேன் என்பது பொருள்.


காவிரி ஒழுங்காற்று குழு, காவிரியில் தினமும் வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் இதனை உறுதி செய்தது.


ஆனால், சிவக்குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என தெரிவித்து உள்ளதுடன், கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை நிறைவேற்றாத நிலையில் முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதில் எந்த பயனும் இல்லை.


இந்த பிரச்னை விவசாயிகளின் வாழ்வதார பிரச்னை என்பதை உணர வேண்டும். அதிமுக ஆட்சியின் போது காவிரி பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பு வழங்கிவிட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது.


வறட்சி நிலவுவதாலும், அணையில் இருந்து தண்ணீர் திறக்காத காரணத்தினாலும் விவசாயிகளால் விவசாயம் செய்யமுடியவில்லை. எனவே, தொடக்க வேளாண்மை வங்கிகளில் விவசாயிகளின் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் 6ம் தேதி வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement