சொட்டு நீர் பாசன திட்டத்திற்குவிவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சொட்டு நீர் பாசனத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) சுரேஷ் செய்திக்குறிப்பு: மத்திய மற்றும் மாநில அரசு மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு, நுாறு சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் நுண்ணீர்பாசனம் அமைத்து தரப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்திற்கு 2026–27ம் ஆண்டில், 1300 எக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 320 எக்டேர் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், விவசாயிகள் சேர்வதற்கு தங்களின் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி, சிட்டா, அடங்கல், ஆதார் எண், சிறு, குறு விவசாயி சான்று, வயல் வரைபடம், நிலத்தின் மண் மற்றும் தண்ணீர் ஆய்வு அறிக்கை ஆகியவற்றை கொடுத்து, எம்.ஐ.எம்.ஐ.எஸ்., இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கரும்பு, பருத்தி, மக்காசோளம், துவரை ஆகியவற்றிற்கு சொட்டு நீர்பாசனமும், நிலக்கடலை,உளுந்து, காராமணி, கேழ்வரகு போன்ற பயிர்களுக்கு தெளிப்பு நீர் அல்லது மழைத்துாவான் பாசன கருவிகளும் அமைத்து தரப்படுகின்றது. இதனால், வாய்க்கால் வழியாக பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதால் ஏற்படும் நீர் இழப்பு, சொட்டு நீர்பாசனத்தில் தவிர்க்கப்படும்.
நுண்ணீர் பாசனத்தின் மூலம் 40-50 சதவீதம் நீர் சேமிக்கப்படுகின்றது. நீரின் பயன்பாட்டுத்திறன் அதிகரித்து பயிர் விளைச்சலும் அதிகரிக்கும். சொட்டு நீரின் மூலம் உரமிடுவதால், பயிர்களுக்கு சமச்சீராக சத்துகள் கிடைக்கின்றது. இதனால் பயிர் வளர்ச்சி சீராகவும், பூச்சி நோய் தாக்குதலை தாங்கியும் வளர்ந்து, அதிக மகசூல் தருவதாக கண்டறியப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். மேலும், துணை நீர் மேலாண்மை நடவடிக்கைகள் திட்டத்தின் மூலம் பி.வி.சி., குழாய், புதிய மின் மோட்டார் மற்றும் டீசல் என்ஜீன் பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க மற்றும் நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவும் மானியம் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
45 கிலோ குட்கா பறிமுதல்
-
நதிகளுக்கு நன்றி சொல்லும் ஆடி பெருக்கு
-
தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் குப்பை மேடு துாய்மையை அலட்சியப்படுத்தியதால் அதிருப்தி
-
புதுச்சேரியிலிருந்து காரில் மது கடத்திய இருவர் கைது
-
புதுப்பிப்பு நகர்ப்புற நில ஆவணங்கள் டிஜிட்டல் வரைபடங்களாக... மத்திய அரசின் ‘நக் ஷா’ திட்டத்தில் களப்பணிகள் தீவிரம்
-
வாகன தணிக்கை வீடியோ எடுத்த டிரைவர் கைது