செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ், 'அட்மா' திட்டத்தில் ஈசநத்தம் கிராம விவசாயிகளுக்கு, செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி நடந்தது

அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா முன்னிலை வகித்து, துறை சார்ந்த திட்டம் குறித்து விளக்கினார். மேலும், தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு, பதிவு செய்து அடையாள எண் பெறுவது குறித்து விளக்கினார்.கரூர் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சந்தானதுரை, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். இதில், துவரை, நிலக்கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு அவசியம் குறித்து விளக்கமளித்தார். அவரை தொடர்ந்து நடமாடும் ஏமூர் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன் விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிக்கும் முறை, மண் மாதிரி எடுப்பதின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.
ஈசநத்தம் கால்நடை மருத்துவர் பகத்சிங் மற்றும் ஆண்டிப்பட்டிக்கோட்டை கால்நடை மருத்துவர் சரவணன் ஆகியோர் விவசாயிகளுக்கு செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு முறைகள், கொட்டகை பராமரிப்பு முறைகள், அவைகளுக்கு அளிக்கும் குடற்புழு நீக்கம், உன்னி நீக்கம், தடுப்பூசி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கமளித்தனர்.

Advertisement