தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை

கிருஷ்ணராயபுரம்:ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் மதியழகன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் பஞ்., மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கின் மறுநாள், 19ல் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியாக தலையில் தேங்காய் உடைக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், துாய்மைப்பணி, வாய்க்காலில் பக்தர்கள் குளிக்க தண்ணீர் திறந்து விடுதல், கூட்ட நெரிசல் ஏற்படமால் இருக்க போலீசார் பாதுகாப்பு, மருத்துவ வசதி, தீயணைப்பு வீரர்கள் தயார் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகம், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை நிர்வாகம், மற்றும் லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், கோவில் குடிப்பாட்டுகாரர்கள், கோவில் பூசாரி பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement