ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு

கரூர்:ஆடிப்பெருக்கையொட்டி, மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில், கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்தாண்டு ஆக., மாத தொடக்கத்தில் மேட்டூர் அணையில் இருந்து, 17,000 கன அடி தண்ணீர், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு வந்தது. ஆனால், தற்போது மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே உள்ள மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு, 527 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. இந்நிலையில், நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம், காவிரியாற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடுவது வழக்கம். ஆனால், தற்போது குறைந்தளவில் தண்ணீர் செல்வதால், காவிரியாற்றின் கரையோர பகுதிகளில் தண்ணீர் இல்லை. இதனால், பொதுமக்கள் ஆடிப்பெருக்கின் போது, புனித நீராட காவிரியாற்றின், நடுப்பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement