இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு: மாஜி ஐஜி - உயரதிகாரிக்கு துாக்கு

1

கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ல், 270 பேரை பலி வாங்கிய ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு வழக்கில், அந்நாட்டு போலீஸ் முன்னாள் ஐ.ஜி., மற்றும் ராணுவ அமைச்சகத்தின் முன்னாள் உயரதிகாரி ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த 2019 ஏப்ரல் 21ல், ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் மீது அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 45 வெளிநாட்டினர் உட்பட, 279 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்கள் நடப்பதற்கு சில வாரங்கள் முன்பே, பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த உள்ளதாக இந்திய உளவுத் துறை, இலங்கை அரசை எச்சரித்திருந்தது. ஆனால், அந்நாட்டு பாதுகாப்பு படையினரும், உயர் அதிகாரிகளும் அதை அலட்சியம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, இலங்கை போலீஸ் முன்னாள் ஐ.ஜி., பூஜித் ஜெயசுந்தர மற்றும் அந்நாட்டு ராணுவ அமைச்சகத்தின் முன்னாள் உயரதிகாரி ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மீது புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Latest Tamil News
கடந்த 2022ல், கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்தது. அந்நாட்டு அரசு மேல்முறையீடு செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

விசாரணை முடிந்து நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், 'குடிமக்களின் உயிரை பாதுகாப்பதிலும், பொது பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இருவரும் கடமையை செய்ய தவறிவிட்டனர். இருவருக்கும் துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.

இலங்கையில், கடந்த 1976ம் ஆண்டுக்கு பின் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே துாக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அது, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement