ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்; வெளியேற்றும் நடவடிக்கையில் 34 பேர் உயிரிழப்பு

4

மாட்ரிட்: ஸ்பெயின் எல்லைக்குள் ஒரே நாளில் 60,000 அகதிகள் திடீரென நுழைய முயன்றதை அடுத்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில், 34 பேர் உயிரிழந்தனர்.

வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையின் காரணமாக, பலர் வாழ்வாதாரம் தேடி, அண்டை நாடான ஸ்பெயினில் உள்ள வட ஆப்ரிக்க பகுதியான சியூட்டா நகருக்குள் படையெடுத்து வருகின்றனர். அவ்வாறு, கடல் வழியாக வரும் அகதிகளை உடனடியாக நாடு கடத்த முடியாது என்று ஸ்பெயின் நாட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, ஒரே நாளில் 60 ஆயிரம் பேர் சியூட்டா நகருக்குள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் நேற்று முன்தினம் நுழைய முயன்றனர்.

சியூட்டா நகரை நோக்கியிருந்த குன்றின் மீது திரண்டிருந்த நுாற்றுக்கணக்கான அகதிகள் மீது, மொரோக்கா பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பலர் கடலில் விழுந்து தப்ப முயன்றனர்.

சிலர் ஸ்பெயினை நோக்கியும், பலர் மொரோக்கோவை நோக்கியும் திரும்பினர். அதேபோல், எல்லையில் உள்ள தடுப்பு வேலியை ஏராளமான அகதிகள் ஒரே நேரத்தில் கடக்க முயன்றனர். அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த இரு சம்பவங்களிலும் 34 அகதிகள் உயிரிழந்தனர். சியூட்டாவை தொடர்ந்து, ஸ்பெயினின் மற்றொரு வட ஆப்ரிக்க பகுதியான மெலில்லா நகருக்குள்ளும் அகதிகள் நுழைய முயன்றனர்.

எல்லைப் பகுதியில், பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது, அவர்களின் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். எல்லையை மீறி ஆயிரக்கணக்கானோர் நுழைந்தது ஸ்பெயினின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்றும், இதற்கு மனிதக் கடத்தல் கும்பல்கள்தான் காரணம் என்றும் அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்பெயினின் இந்த அகதிகள் பிரச்னையால் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் தங்கள் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளன.

Advertisement