'நீங்கள் விரும்பும் போதெல்லாம் வாருங்கள்': மேற்கு வங்கம் திரும்பிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு முதல்வர் உத்தரவாதம்

1

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, ''நாடு கடத்தப்பட்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் மாநிலத்திற்கு வரும்போதெல்லாம் அவருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்'' என்று உறுதியளித்தார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு, நஸ்ரின் தனது முதல் பொது நிகழ்ச்சிக்காக கொல்கட்டா திரும்பினார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 63. இஸ்லாமிய சமூகத்தை விமர்சித்தும், பெண்ணியம் போற்றியும் பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து இவர் எழுதிய, 'லஜ்ஜா' நாவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, 1994ல் வங்கதேசத்தில் இருந்து அவர் வெளியேறினார். மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் தஸ்லிமா குடிபுகுந்தார். அங்கிருந்தபடியே, தன் சுயசரிதையான, 'த்விகண்டிதோ' என்று நூலை இவர் எழுதினார். இதில், இடம்பெற்ற சில கருத்துகள் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி, அப்போதைய இடதுசாரி அரசு இந்த நாவலுக்கு தடை விதித்தது.

அதேசமயம், நாவலில் இடம்பெற்றிருந்த கருத்துகளுக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதையடுத்து, மார்க்., கம்யூ., கட்சியைச் சேர்ந்த புத்ததேவ் பட்டாசார்யா தலைமையிலான அப்போதைய மேற்கு வங்க அரசு, தஸ்லிமா நஸ்ரினை கடந்த 2007ல் கொல்கட்டாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. ரகசியமாக ஜெய்ப்பூர் அழைத்து செல்லப்பட்ட அவர், ஏழு மாதங்களுக்கு பின் டில்லிக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 2008ல், நம் நாட்டைவிட்டு வெளிநாடு சென்ற தஸ்லிமா நஸ்ரின் நீண்ட கால விசாவில் மீண்டும் இந்தியா திரும்பினார். மேற்கு வங்க அரசு, அவரை அனுமதிக்காததால், டில்லியிலேயே அவர் தங்கியிருந்தார். தஸ்லிமாவை, மீண்டும் மேற்கு வங்கத்துக்கு அழைத்து வருவதற்கான சூழலை ஏற்படுத்தி தருமாறு மத்திய அரசை, மாநில பா.ஜ., தலைவரும், அக்கட்சியின் எம்.பி.,யுமான சமிக் பட்டாசார்யா வலியுறுத்தினார்.

இந்நிலையில், கொல்கட்டாவில் நடந்த இலக்கிய விழாவில் பங்கேற்பதற்காக, தஸ்லிமா மேற்கு வங்கம் வந்தார். 19 ஆண்டுகளுக்கு பின் கொல்கட்டா வந்த அவருக்கு, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, “மீண்டும் கொல்கட்டா வந்தது மகிழ்ச்சியை தருகிறது,” என, தஸ்லிமா குறிப்பிட்டார். ரவீந்திர சதனில் நடந்த மத அடிப்படைவாதத்திற்கு எதிரான இலக்கிய நிகழ்ச்சியில் பா.ஜ.,வைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, பிரபல எழுத்தாளர் ஷிர்ஷேந்து முகோபாத்யாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினும் பங்கேற்றார்.

அவரிடம் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறியதாவது: நாடு கடத்தப்பட்ட வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் மாநிலத்திற்கு வரும்போதெல்லாம் அவருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். பாதுகாப்பு வழங்குவது முதல்வர் என்ற முறையில் எனது கடமையாகும். ஒருமுறை மட்டுமல்ல, நீங்கள் விரும்பும் போதெல்லாம், எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கு வங்கத்திற்கு வாருங்கள். இங்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் மக்களை அமைதியாக்க முயற்சிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது. இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறினார்.

Advertisement