தான்வி சர்மா 'சாம்பியன்': தைபே ஓபன் பாட்மின்டனில்

தைபே சிட்டி: தைபே ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தான்வி சர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.

சீனதைபேயில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற தைபே ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் தான்வி சர்மா 17, வியட்நாமின் துய் லின் நுகுயென் 28, மோதினர். மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய தான்வி சர்மா 21-16, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இத்தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இளம் நட்சத்திரமானார் தான்வி (17 வயது, 222 நாள்). இதற்கு முன், சீனதைபே வீரர் டாய் டிசூ-யிங் (18 வயது, 109 நாள், 2012) இச்சாதனை படைத்திருந்தார். தவிர, இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்தியரானார் தான்வி. இதற்கு முன், 2008ல் இந்தியாவின் செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.


பஞ்சாப் வீராங்கனை தான்வி கூறுகையில், ''தைபே ஓபனில் பட்டம் வென்றதில் மகிழ்ச்சி. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இனி, 'சூப்பர் 500', 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற தொடரை வெல்ல முயற்சிப்பேன்,'' என்றார்.

Advertisement