இந்திய நட்சத்திரங்களுக்கு உற்சாக வரவேற்பு: டில்லியில் ரசிகர்கள் பரவசம்

புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்று அசத்திய இந்திய நட்சத்திரங்கள் நேற்று தாயகம் திரும்பினர். இவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த 23வது காமன்வெல்த் விளையாட்டு நிறைவு பெற்றது. இந்தியா சார்பில் 123 பேர் பங்கேற்றனர். முதல் கட்டமாக பளுதுாக்குதலில் சாதித்த மீராபாய் சானு, லவ்பிரீத் சிங், ராஜா முத்துப்பாண்டி உள்ளிட்டோர் தாயகம் திரும்பினர். இவர்களுக்கு டில்லி, இந்திரா விமான நிலையத்தில் நுாற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். பளுதுாக்குதலில் இம்முறை இந்தியா ஒரு தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கம் வென்றது.


நாட்டுக்கு பெருமை: மீராபாய் சானு (48 கிலோ பிரிவு) கூறுகையில்,''காமன்வெல்த் விளையாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றேன். பதக்கம் வெல்லும் போது பொறுப்பு அதிகரிக்கும். கூடுதல் பலம் கிடைக்கும். வரும் போட்டியில் கடினமாக முயற்சி செய்ய உத்வேகம் அளிக்கும். ஆசிய விளையாட்டில் (செப்.19-அக்.4, 2026, ஜப்பான்) பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு. மணிப்பூர் மண்ணில் பிறந்து, நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்டது பெருமை அளிக்கிறது,''என்றார்.

இது சகஜம்: பஞ்சாப் வீரர் லவ்பிரீத் சிங் (+110 கிலோ பிரிவு) ஒரு கிலோ வித்தியாசத்தில் தங்கத்தை நழுவவிட்டார். இவர் கூறுகையில்,''இருவர் போட்டியிடும் போது ஒருவர் தோற்றாக வேண்டும். கடினமாக முயற்சி செய்தேன். ஒரு கிலோ வித்தியாசத்தில் தங்கம் தவறியது. இது விளையாட்டில் சகஜம். வெள்ளி வென்றது சிறப்பான விஷயம். அடுத்து ஆசிய விளையாட்டில் சாதிக்க பயிற்சி மேற்கொள்ள உள்ளேன்,''என்றார்.

பிந்தியாராணி (58 கிலோ பிரிவு) கூறுகையில்,''வெண்கலம் வென்றது மகிழ்ச்சி அளித்தது. இன்னும் கடினமாக பயிற்சி மேற்கொண்டு, வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவேன். ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி,''என்றார்.
அமைதி மலரட்டும்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பிறந்த ராணுவ வீரரான ரிஷிகாந்தா சிங் (60 கிலோ பிரிவு) கூறுகையில்,''கிளாஸ்கோ போட்டியில் வெள்ளி வென்றேன். அடுத்து முறை இன்னும் கூடுதல் எடை துாக்கி தங்கம் கைப்பற்றுவேன். மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். இதன் மூலம் என்னைவிட சிறந்த நட்சத்திரங்கள் மணிப்பூரில் இருந்து மலர வாய்ப்பு ஏற்படும்,''என்றார்.


நம்ம ராஜா இலக்கு
வெள்ளி வென்ற தமிழக பளுதுாக்குதல் வீரர் ராஜா முத்துப்பாண்டி (65 கிலோ பிரிவு) கூறுகையில்,''2018, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை. பின் 2 அல்லது 3 முறை 'ஆப்பரேஷன்' செய்ய நேரிட்டது. இந்த சோதனைகளை கடந்து கடின பயிற்சி மேற்கொண்டேன். கிளாஸ்கோவில் தங்கம் வெல்ல விரும்பினேன். எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை. இருப்பினும் இந்தியாவுக்காக முதல் முறையாக வெள்ளி பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளித்தது. வரும் ஆசிய விளையாட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) சாதிப்பதே இலக்கு. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகளுக்கு தயாராக வேண்டும்,''என்றார்.

Advertisement