‘பிபா’ கால்பந்து உத்திகளை விளக்கி அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

சென்னை: சென்னையில் லேடன்ட்வியூ அனலிட்டிக்ஸ் நிறுவனம், தன் ‘சென்னை கால்பந்து லீக்’ திட்டத்தின் ஒரு பகுதியாக 300 அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு கால்பந்து பயிற்சி வகுப்பு, தாகூர் திரைப்பட மையத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சென்னையின் 10 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 6 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர்.

இதில் பிபா உலகக் கோப்பை 2026 போட்டியின் முக்கிய தருணங்கள் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டு, அதில் பயன்படுத்தப்பட்ட ஆட்ட உத்திகள் மற்றும் தந்திரங்கள் குறித்து, ‘சென்னையின் எப்.சி.’ பயிற்சியாளர்கள் செயல்முறை விளக்கங்களை வழங்கினர்.

உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் மைதானத்தில் இடங்களை உருவாக்குவது, ஆட்டத்தை வாசிப்பது, நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிப்பது மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை கால்பந்து லீக் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நேரத்துக்குப் பிறகு சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் மூலம், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் போட்டி அனுபவம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement