கார் - ஆம்னி பஸ் மோதல்; சிறுவன் உட்பட 3 பேர் பலி

திருச்சி: திருச்சி அருகே கார் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில், சமயபுரம் கோவிலுக்கு வந்த சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காடை சேர்ந்தவர் பாண்டியன், 49. இவர், தன் சகோதரர் திருநாவுக்கரசு, 52, உட்பட குடும்பத்தினர், உறவினர்களுடன், நேற்று முன்தினம் மதியம், தஞ்சை கோவிலுக்கு, 'மஹிந்திரா சைலோ' காரில் சென்றார்.

தஞ்சையில் கோவில்களுக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மேல், சமயபுரம் கோவிலுக்கு செல்ல, பள்ளிவிடை என்ற இடத்துக்கு பைபாஸ் சாலையில் வந்தனர்.

சமயபுரம் கோவிலுக்கு செல்லும் புறவழிச்சாலையை தாண்டி கார் சென்று விட்டதால், டிரைவர் காரை நிறுத்தி, பின் நோக்கி வர முயற்சித்துள்ளார்.

அப்போது, மதுரையிலிருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ், காரின் பின் பகுதியில் மோதியதில், கார் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பாண்டியன், அவரது உறவினர் தனலட்சுமி, 47, பவின், 9, என்ற சிறுவன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

காரில் வந்த கவுசல்யா, வளர்மதி, தில்லையம்மாள் ஆகிய மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மூவர் லேசான காயத்துடன் தப்பினர். சமயபுரம் போலீசார், ஆம்னி பஸ் டிரைவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார், 27, என்பவரை கைது செய்தனர்.

Advertisement